ஸ்ரீ நடராஜர் தத்துவம் !
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்கள் என்பர். இந்த ஐந்தின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது. பரம்பொருளாகிய இறைவன் ஐந்து பூதங்களிலும் கலந்து நின்று நம்மை வழிநடத்துகிறார். இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவை சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்திற்குரிய சிதம்பரமே முதன்மையாக இருக்கிறது. பஞ்சபூதத லங்களுக்குச் செல்லும்போது, சிதம்பரத்தில் தொடங்கி, காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்று யாத்திரையை நிறைவு செய்வது மரபாகும். சிதம்பர ரகசியம்..
சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும். சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.
நடராஜர் சன்னதி அமைப்பு..
நடராஜப்பெருமான் இடைவிடாமல் ஆடிக் கொண்டே இருக்கும் தலம் சிதம்பரம். ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் சிதம்பரம் கோயிலுக்கு மட்டுமே கோயில் என்று பெயர். தில்லைவனம், புண்டரீகபுரம், பொன்னம்பலம், கனகசபை, வியாக்ரபுரி, பூலோக கைலாயம் என்னும் வேறு பெயர்களும் இதற்கு உண்டு. சிதம்பரத்தை சித்+அம்பரம் என்று பிரிப்பர். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்ரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் தகவல் உண்டு. இந்த சக்ரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறார். சைவ ஆகமங்கள் நடராஜரை இதயத்திற்கு உரியவராக குறிப்பிடுகின்றன. இதை உணர்த்தும் விதத்தில் நடராஜர் சந்நிதியின் கருவறை விமானம் இதயவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இடைவிடாத இதயத்துடிப்பினை மையமாகக் கொண்டேமனிதனின் இயக்கம் நடக்கிறது. அதைப் போலவே, ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற தத்துவத்தை சிதம்பர நடராஜர் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்.
பொன்னம்பலத் தத்துவம்..
சிதம்பரத்தில் கனகசபையும், சித்சபையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடமே பொன்னம்பலம். இதற்கு சிற்றம்பலம், ஞானசபை, சித்சபை என்ற பெயர்களும் உண்டு. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.
நடராஜரின் கீழே இன்னொரு நடராஜர்..
ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.
நடராஜர் சன்னதியில் தீர்த்தம்..
பெருமாள் கோயில்களில் தீர்த்தம் தருவது வழக்கம். ஆனால், சிவாலயமான திருவாலங்காடு நடராஜர் சன்னதியில் தீர்த்தம் தருகின்றனர். நடராஜர், ஊர்த்துவதாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். சுவாமி தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து அவர்களை எழுப்பினார். இதனடிப்படையில் இங்கு தீர்த்தம் தரப்படுகிறது.
ஆச்சரிய அம்பிகை..
நடராஜரின் துணைவியை சிவகாமி என்பர். ஆனால், திருவாலங்காட்டு அம்பாளுக்கு சமி சீனாம்பிகை என்று பெயர். நடராஜரின் நடனத்திற்கு ஈடுகொடுத்து, காளி ஆடியபோது ஒரு பெண்ணால் இப்படியும் ஆட முடியுமா? என இந்த அம்பாள் ஆச்சரியமடைந்தாள். இதனால், இவளுக்கு சீனாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. சீனம் என்றால் ஆச்சரியம். இவள் இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப்போகும் நிலையில், ஆச்சரியப்படும் பாவனையுடன் முகத்தை வைத்திருக்கிறாள். இந்த சிலை அமைப்பு காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்.
அம்பிகையும் அவருக்குள்ளே!
நடராஜரின் திருநடனத்தை சிவகாமி என்ற பெயர் தாங்கி அம்பிகை கண்டு களிப்பதைக் காணலாம். ஆனால், சிதம்பரத்தில் நடராஜர் சிவசக்தியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். அதாவது ஆண்பாதி, பெண்பாதியான அர்த்தநாரீஸ்வரரின் தன்மையுடன் திகழ்கிறார். வலப்பாகம் சிவமும், இடப் பாகம் சக்தியும் வீற்றிருக்கின்றனர்.அதனால், சிவகாமி இல்லாமல் நடராஜரை வழிபட்டாலே இருவரையும் வழிபட்ட பலன் உண்டாகும். சிவபெருமானுக்குரிய 25 சிவமூர்த்தங்களில் தலையாயதாக நடராஜரே விளங்குகிறார். இவருக்கு அம்பலவாணர், ஆடல்வல்லான், கூத்தப்பெருமான், சபாபதி, நிருத்தன், நடேசன், சித்சபேசன் என்று பல பெயர்கள் இருந்தாலும் நடராஜர் என்ற பெயரே மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பழந்தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தில் ஆடல்வல்லான் என்று இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஆலங்காட்டு ரகசியம்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில், நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தினசபை உள்ளது. சிதம்பர ரகசியம் போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து கிடக்கிறது. காரைக்காலம்மையார் சிவனைத் தரிசிக்க கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றபோது சிவன் அவரை அம்மா! என்றழைத்து,என்ன வரம் வேண்டும்? எனக்கேட்டார். அவர் பிறவாமை வேண்டும். பிறந்தாலும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்! என்றார். சிவன் அந்த வரத்தை அருளவே, ஆலங்காடு வந்த அம்மையார் மூத்த திருப்பதிகம் பாடினார். இவ்வேளையில் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய சிவன், தனக்கு பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சன்னதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னதி எழுப்பினான். இதில் காரைக்காலம்மையார் ஐக்கியமானார். இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதை ஆலங்காட்டு ரகசியம் என்கின்றனர்.
ஆட்டம் எத்தனை ஆட்டம்..
நடனக்கலைக்கு நாயகனாக திகழ்பவர் சிவன். அதனால், அப்பெருமானை நடேசன் என்று போற்றுகிறோம். இவர் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும். சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர். இதனைபார்க்க முக்தி தரும் தில்லை என்று கூறுவர். நம் ஆன்மாவை, சிவகாமியாக எண்ணி, நடராஜப் பெருமானின் நடனத்தை காணவேண்டும் என்பது ஐதீகம்.
அம்பலக்கூத்தனே, தில்லை நடராஜனே போற்றி !! போற்றி !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக